மத்திய அரசைக் கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

மத்திய அரசைக் கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண்மை விரோத மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறவலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். இதில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சண்முகம் (ஐஎன்டியுசி),சி.தங்கவேல் (ஏஐடியுசி), டி.எஸ்.ராஜாமணி(ஹெச்எம்எஸ்), பத்மநாபன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சிஐடியு), மு.ரத்தினவேல் (எல்பிஎஃப்), மு.தியாகராஜன் (எம்எல்எஃப்), ஆர்.தாமோதரன் (ஏஐசிசிடியு), என்.ரகுபுநிஸ்தார் (எஸ்டிடியு), பி.வில்லியம் (டிடிஎஸ்எஃப்) மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 500 பேரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சாலை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோவையில் வங்கி, தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் குறிப்பிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிக்கு வராததால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. எனினும், பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை வழக்கம்போல இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

கோவையில் சுமார் 30 சதவீதம் ஆட்டோக்கள் இயங்கவில்லை. மாநில வருவாய்த் துறை அலுவலகங்களில் பணியாற்றுபவர்களில் 20 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூரில் ரயில்நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சலகம், தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கருவம்பாளையம், பெருமாநல்லூர் சாலை, அவிநாசி சாலை ஆகிய 7 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தை மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் சட்டங்களை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிலர் பட்டை நாமம் அணிந்தும், மண்சட்டியை தலையில் கவிழ்த்து வைத்தும் நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோர் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். குன்னத்தூர், பல்லடம், அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூர், உடுமலை, மடத்துக்குளம், பொங்கலூர் ஆகிய இடங்களில் மறியல் நடைபெற்றது.

மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் நடைபெற்ற மறியல் தொடர்பாக 1536 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். வணிகவரித் துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன், சுகாதார ஆய்வாளர் சங்கத்தை சேர்ந்த நவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின.

இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் விவசாய அணி சார்பில்திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமைவகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஊர்வலமாக சென்று தலைமை அஞ்சல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட 35 பேரை வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம்

உதகையில் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஏடிசி பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.இதில் போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், சுமை தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர். படம்: ஜெ.மனோகரன்திருப்பூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுப்பராயன் எம்.பி. உள்ளிட்டோர். உதகை ஏடிசி பகுதியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர். படம்:ஆர்.டி.சிவசங்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்