செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட 9,863 பேர் 202முகாம்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 111 முகாம்கள் அமைக்கப்பட்டு 6,538 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று புயல் கரையை கடந்தநிலையில், கலங்கரை விளக்கம்பகுதி உட்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் முறிந்து விழுந்த பெரிய மரத்தை தேசிய பேரிடர் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அப்புறப்படுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குன்றத்தூர், திருமுடிவாக்கம் மற்றும் வழுதவேடு ஆகிய கிரமங்களில் கரையை ஒட்டி அமைந்துள்ள தாழ்வான குடியிருப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் 55 முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 2,016 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முகாம்களில் உள்ளோருக்கு, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் நிவாரண உதவிப் பொருட்களை நேற்று வழங்கினார். போதிய அளவுக்கு குடிநீர் வசதி உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.
செம்பரம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 139.40, காஞ்சிபுரத்தில் 135.20, குன்றத்தூரில் 135.10மி.மீ என மாவட்டத்தில் சராசரியாக 111.92 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வசந்தம் நகர், பட்டாபிராம் - மேற்கு கோபாலபுரம்,சித்தேரிக்கரை, திருமுல்லைவாயல் - சோழம்பேடு சாலை, அண்ணனூர், கன்னடபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புபகுதிகள் மற்றும் காலி மனைகள் நீர்க்காடுகளாக உருமாறியுள்ளன.
மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்த 1,309 பேர், மீஞ்சூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள 36 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சராசரியாக 13 செ.மீ மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 19செ.மீ, குறைந்தபட்சமாக ஊத்துக்கோட்டை, ஆர்.கே. பேட்டையில் தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago