சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ‘நிவர்’ புயலால் விடிய விடிய மழை கிருஷ்ணகிரியில் 4 வீடுகள் இடிந்தன

By செய்திப்பிரிவு

‘நிவர்’ புயல் காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல் நேற்று அதிகாலை கரையை கடந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதி மற்றும் சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது.

சேலம் நாராயணன் நகர், பச்சப்பட்டி, தாதுபாய்குட்டை, பள்ளப்பட்டி, சின்னதிருப்பதி, சூரமங்கலம், முல்லை நகர், நெத்திமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: தம்மம்பட்டி 27, காடையாம்பட்டி 9, கெங்கவல்லி 24, வீரகனூர் 37, கரியகோவில் 33, ஆணைமடுவு 17, ஏற்காடு 34, வாழப்பாடி 5.7, மேட்டூர் 12.2, ஓமலூர் 3, ஆத்தூர் 28.8, பெத்தநாயக்கன்பாளையம் 32, சேலம் 1.8 மிமீ மழை பதிவானது.

இரவில் கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது. நேற்று பகலில் தொடர்ந்து மிதமான மழை பொழிவு காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:

பெனுகொண்டாபுரம், ராயக் கோட்டையில் அதிகபட்சமாக 25.40 மிமீ, போச்சம்பள்ளி 24.60, ஊத்தங்கரையில் 19.60, கிருஷ்ணகிரி 19.60, பாரூர் 18, நெடுங்கல் 14.20, சூளகிரி 9, தேன்கனிக்கோட்டை, ஓசூரில் 4 மில்லிமீட்டர் மழை பதிவானது.

வீடுகள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப் பேட்டை அருகே உள்ள வெள்ளக் குட்டை ஊராட்சியில் இருளர் காலனியில் 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி விஜயன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இப்பகுதியில் பெய்த மழையால், சரஸ்வதியின் வீட்டு பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்து வந்த துணை ஆட்சியர் சேதுராமலிங்கம், ஊத்தங் கரை வட்டாட்சியர் தண்டபாணி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அப்பகுதியில் உள்ள 11 குடும்பங்களை சேர்ந்த 33 பேரை, அங்குள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தில் தங்க வைத்தனர். மேலும், அவர்களுக்குத் தேவையான உணவு, போர்வை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வழங்கினர். இதேபோன்று குருகப்பட்டி, அம்மன்கோயில்பதி, கோட்டரப் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மழையின் போது 3 வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காய முமின்றி உயிர் தப்பினர். அவர் களை அதிகாரிகள் மீட்டு அரசுப்பள்ளிகளில் தங்க வைத்துள்ளனர்.

ஓசூரில் கனமழை

ஓசூர் வட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கி பகல் முழுவதும் மழை நீடித்தது. இதனால் ஓசூர் நகரின் பிரதான சாலைகளான மகாத்மா காந்தி சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கண்காணிப்பு தீவிரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:

தருமபுரி 10 மிமீ, பாலக்கோடு 12.6, மாரண்டஅள்ளி 3 மிமீ. மழைப் பொழிவு தொடர்ந்து இருந்ததால் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை யோரம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட பெரிய பட்டி, நரிபள்ளி, கோட்டப் பட்டி, பைரநாயக்கன்பட்டி, சிட்லிங், எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சாரல் மழை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று காலை சற்று கனமழை பெய்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 95.41 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 913 கனஅடியாகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்