விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு மோட்டா ரக அரிசியை அதிகாரிகள் வாங்கி மோசடி செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட சிஐடியூ செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 19 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 5 லட்சத்து 86 ஆயிரத்து 200 ரேஷன் கார்டுகள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் 8 ஆயிரம் டன் சன்ன ரக ரேஷன் அரிசி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சன்ன ரக அரிசிக்குப் பதிலாக மோட்டா ரக அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த அரிசி மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமானதாக இல்லை. இதனால், இந்த மோட்டா ரக அரிசியை பொதுமக்கள் வாங்காமல் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து விசாரித்தபோது, அதிகாரிகள் சிலர் திட்டமிட்டே தஞ்சையில் இருந்து மோட்டா ரக நெல்லை வாங்கி ஒரு முறை மட்டுமே வேக வைத்து அரைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதாகவும், மக்கள் வாங்காமல் இருக்கும் இந்த அரிசியை ரைஸ்மில் நிர்வாகங்கள் மேலும் ஒரு முறை பாலிஸ் அரவை செய்து, கேரளாவுக்கு கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago