தமிழகம் இழந்த பெருமையை மீட்டாக வேண்டும்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி கிழக்கு, மத்திய மாவட்ட திமுக மற்றும் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுகசார்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்றதலைப்பில் பிரச்சார பொதுக்கூட்டம் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் திமுக முன்னோடிகள் 153 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் 120 பேருக்குமாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப், தென்காசி தெற்கு மாவட்டத்தில் 150 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்டத்தில் 245 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை ஆகியோர் பொற்கிழி வழங்கினர்.

காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் எல்லா வகையிலும் பின்னோக்கிய மாநிலமாக உள்ளது. தமிழகம் இழந்த பெருமையை மீட்டாக வேண்டும். மக்களிடம் மத உணர்வுகளை தூண்டி விட்டு, திமுகவை வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். கோயில்களை, அறநிலையத் துறையை காத்தது திமுக ஆட்சிதான்.

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக, காங்கிரஸ் கூட்டணி என்ன சாதனைகளை செய்தது எனசென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட தொடக்க விழாவில் கேட்கிறார். மெட்ரோ ரயில்முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதே திமுக ஆட்சியில் தான். தமிழகத்துக்கு பாஜக ஆட்சியில் செய்த திட்டங்களை முதலில் அமித்ஷா வெளியிட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், மைதீன்கான், எம்பிக்கள் தனுஷ் எம்.குமார் (தென்காசி), ஞானதிரவியம் (திருநெல்வேலி) ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்