ரூ.1.50 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி செய்த தாய், மகன் மீது வழக்கு தி.மலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் அருகே விவசாய நிலத்தை விற்பனை செய்ய தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி செய்ததாக தாய், மகன் உள்ளிட்ட இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த முனியப்பன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (60). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபராக உள்ளார். இவருக்கு, முனியப்பன் தாங்கல் கிராமத்தில் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகே, தி.மலை கிருஷ்ணன் தெருவில் வசிக்கும் செல்வி என்பவருக்கு சொந்தமாக 4.26 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தை லோகநாதன் வாங்கிக்கொள்ள குப்பன் என்பவர் மூலம் கடந்த ஆண்டு செல்வியிடம் பேசியுள்ளார். முடிவில், நிலத்தை ரூ.1.50 கோடிக்கு நிலத்தை கிரயம் செய்துகொள்ள லோகநாதன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1 லட்சம் தொகையை செல்விக்கு முன்பணமாக லோக நாதன் கொடுத்துள்ளார். அதன் பிறகு, கரோனா ஊரடங்கு காரணத் தால் பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் லோகநாதனை தொடர்பு கொண்ட செல்வி, நிலத்துக்கான கிரயத் தொகையில் இருந்து முன் கடனாக ரூ.22 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். அதன்படி, பெங் களூருவில் உள்ள வங்கிக் கிளை யில் இருந்து செல்விக்கு அந்தப் பணத்தை அனுப்பியுள்ளார். தொடர்ந்து, தி.மலை அய்யங்குளம் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்பதால் மேலும் ரூ.21 லட்சம் பணத்தை கொடுக்குமாறு செல்வி கேட்டதால், வங்கி மூலம் அந்தப் பணத்தையும் லோகநாதன் கடந்த மே மாதம் 16-ம் தேதி அனுப்பியுள்ளார்.

இம்மாதம் 4-ம் தேதி சுரேஷ் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் லோகநாதன் செலுத்தி யுள்ளார். மொத்தம் ரூ.54 லட்சம் வழங்கிய நிலையில் மீதமுள்ள தொகையை கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்ய லோகநாதன் பேசியுள்ளார். அப்போது, வங்கி மூலம் பணத்தை கொடுத்தால் வரி செலுத்த வேண்டும் என்பதால் நேரடியாக பணத்தை கொடுக்குமாறு செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் கூறியுள்ளனர். இதனை நம்பி கடந்த 6-ம் தேதி செல்வியின் வீட்டில் மீதம் உள்ள ரூ.96 லட்சம் தொகையை ரொக்கமாக கொடுத்துள்ளார். அதன் பிறகு நவம்பர் 9-ம் தேதி நிலத்தை பத்திரப்பதிவு செய்துகொள்ள முடிவானது. ஆனால், பத்திரப்பதிவு செய்யாமல் செல்வி அவரது மகன் சுரேஷ் ஆகியோர் காலம் கடத்தியதுடன் லோகநாதனை மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தி.மலை எஸ்பி அலுவலகத்தில் லோக நாதன் கடந்த 18-ம் தேதி புகாரளித் துள்ளார். எஸ்பி அரவிந்தன் பரிந்துரையின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நிவாஸன் விசாரணை நடத்தி வந்தார்.

இதில், மோசடி உறுதியானதால் செல்வி மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் சுரேஷை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்