திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் நிவாரண மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத் தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் வேடந்தவாடி மற்றும் மேலாரணி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள நிவாரண முகாம்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும் மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்திருந்த ‘நிவர்’ புயல் நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, புயல் எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வும் நடத்தினார். அப்போது, அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் உள்ள நிவர் புயல் நிவாரண மையங்களில் 1,277 குடும்பங்களைச் சேர்ந்த 4,221 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பிஸ்கெட், ரொட்டி, பால், உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
தொடர்ந்து, கலசப்பாக்கம்-காஞ்சி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ‘நிவர்’ புயல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டி தயார் நிலையில் உள்ள குழுக்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago