திருப்பூர் பனியன் தொழிலாளர் களின் புதிய சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென, அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டம், திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஏஐடியுசி பனியன் தொழிற்சங்க பொருளாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு, எல்பிஎஃப், ஐஎன்டியுசி, எம்எல்எஃப்,ஹெச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பின்படி, நாளை (நவ.26) நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம் 100 ஆண்டு காலமாக போராடி பெற்ற 44 சட்ட உரிமைகளை, 4 தொகுப்புகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளை முற்றிலும் பறித்து, நவீன அடிமைகளாக மாற்றக்கூடிய ஆபத்தான சட்ட திருத்தம். அதேபோல, வேளாண்மை சட்ட திருத்தங்கள்மூன்றும் விவசாய உற்பத்தியை நிலைகுலைத்து விடுபவை. எனவே, தொழிலாளர்கள், விவசாயிகள் நலனுக்கு விரோதமான சட்ட திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்.
திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புபோடப்பட்ட சம்பள ஒப்பந்தம்,கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தம்முடிவடைந்து 8 மாதங்கள் கடந்தும், புதிய சம்பள பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் உள்ளது. முதலாளிகள் சங்கத்தினர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.தொழிலாளர்களின் நெருக்கடி நிலை கருதி, உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சந்தா செலுத்தி வருகின்றனர்.
ஆனால், திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், மருத்துவ வசதி கிடைக்காமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து பனியன் தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago