கிட்டம்பட்டியில் உடைந்த தரைப்பாலம் சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கிட்டம்பட்டி கிராமத்தில் உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி ஊராட்சியில் கிட்டம்பட்டி கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் கிராம மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். ஆனால் அதிலிருந்து வீணாகும் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இங்கு தண்ணீர் செல்ல கால்வாய் அமைத்து குழாயைச் சுற்றி தளம் அமைக்க வேண்டும் என்றும், கிராமத்தின் நடுவில் உள்ள உடைந்த தரைப்பாலத்தை புதியதாக அமைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மங்கம்மாபுரம் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் உள்ளது. ஆனால் மின்மோட்டார் பழுதால் தண்ணீர் ஏற்ற முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இங்கு புதிய மின் மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து 3 இடங்களையும் ஒன்றியக்குழுத் தலைவர் அம்சா ராஜன், பி.டி.ஓ., சரவணபவா, ஏ.இ., தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் இந்த பணிகளுக்கான திட்டம் தயாரித்து உடனடியாக மூன்று பணிகளையும் முடிக்க உள்ளதாக பி.டி.ஓ., தெரிவித்தார். ஊராட்சித் தலைவர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள் ராதா சென்றாயன், நடுப்பையன், கோபி உள்பட பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்