கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக் கால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளால், நீரின் வேகம் தடைபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிக்கு வலது மற்றும் இடபுறக்கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 9012 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி வட்டத்தில் பெரிய முத்தூர், சுண்டேகுப்பம், திம்மா புரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் கிருஷ்ணகிரி அணை பாசனத் திட்டத்தின் கீழ் 2 பிரதான கால்வாய்கள் மற்றும் 26 சிறு பாசன ஏரிகள் மூலமாக பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் இடதுபுறக் கால்வாய், அவதானப்பட்டி ஏரி, கோவிலூர் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகளைக் கடந்துபாளேகுளி ஏரிக்குச் செல்கிறது. இக்கால்வாய் 18 கிமீ தூரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கால்வாயில் 28 இடங்களில் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் சிறிய மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால் நீரின் வேகம் தடைபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேஆர்பி இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்கதலைவர் சிவகுரு கூறும் போது,‘‘இக்கால்வாய் மூலம் பாளேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. அங்கிருந்து கால்வாய் மூலம் 28 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் துவாரகாபுரி, அவதானப்பட்டி உள்ளிட்ட கால்வாய் கடந்து செல்லும் சில கிராமங்களில் குப்பையைக் கால்வாயில் கொட்டு கின்றனர். இதனால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வது பாதிக்கப் படுகிறது. தண்ணீரும் மாசடைந்து வருகிறது. எனவே, அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கால்வாய்களில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago