விக்கிரவாண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் தந்தை,மகள் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி அருகே நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(42). விவசாயியான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவசாய பணிக்காக, அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர்(42) என்பவர் மூலமாக,திண்டிவனம் இடையன்குளம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கரோனா பொதுமுடக்கத்தால், வருமானம் பாதிக்கப்பட்டதால் ஐயப்பன் வட்டி கட்டவில்லை. இதனால் வட்டித் தொகையையும் கடன் தொகையுடன் சேர்த்து ரூ.50,000 கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வெற்றுப்பத்திரத்தில் ரூ.2 லட்சம் கடன்பெற்றதாக எழுதி சொத்தை ஜப்தி செய்துவிடுவேன் என்று சம்பத் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன் கடந்த வெள்ளிக் கிழமை, தனது வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கியுள்ளார். ஐயப்பன் குடித்து மீதி வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை அவரது இரண்டாவது மகள் ஆர்த்தீஸ்வரி(7) குடித்துள்ளார். இதனால், அவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து பெரியதச்சூர் போலீஸில் ஐயப்பன் மனைவி மகேஸ்வரி புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சம்பத், ராஜசேகர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை கந்துவட்டி வழக்காக மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஐயப்பனின் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் கந்துவட்டி தடுப்புப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். தலைமறைவான சம்பத்தை தேடிவருகின்றனர்.
கரோனா பொதுமுடக்கத் தால், வருமானம் பாதிக்கப் பட்டதால் ஐயப்பன் வட்டி கட்டவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago