கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரி யர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களில் பலர் மாற்றுப் பணிகளைத் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே கடந்த 8 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு பரிசீலித்து உடனே வழங்க வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தமிழக அரசு கல்வியாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து ஊதிய வரன்முறை நிர்ணயித்து அதனை அரசிதழில் வெளியிட வேண்டும். மேலும், பள்ளி நிர்வாகங்கள் அதனை இசிஎஸ் முறையில் வழங்குவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
பணி நிரந்தரம்
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 2011-ல் பகுதி நேர ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில், கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம் மற்றும் தையல் ஆசிரியர்களை நியமித்தனர். எங்களுக்கு 3-வது கல்வி ஆண்டில் ரூ.2 ஆயிரம், 6-வது கல்வி ஆண்டில் ரூ.700-ம் தொப்பூதியம் உயர்த்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக மே மாதங்களில் சம்பளம் வழங்கவில்லை.
மேலும் 7-வது ஊதியக்குழுவின் 30 சதவீதம் ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, விபத்து காப்பீடு உள்ளிட்டவையும் இதுவரை வழங்கவில்லை. மற்ற துறைகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பலர் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் கருதி முழுநேர வேலையுடன் தமிழக அரசு கருணையுடன் பணி நிரந்தரம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago