தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரித்து விற்பனை

By எஸ்.விஜயகுமார்

தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்காட்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் கோகோ சாக்லேட் உற்பத்திக் கூடம் தொடங்கப்பட்டு, சாக்லேட் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

தோட்டக்கலைத் துறை சார்பில் தமிழகத்தில் ஏற்காடு, சென்னை, ஆனைமலை, கன்னியாகுமரி, பெரியகுளம் உள்ளிட்ட 5 இடங்களில் கோகோ சாக்லேட் உற்பத்திக் கூடம் தொடங்கப் பட்டுள்ளது. ஏற்காடு முதலாவது தாவரவியல் பூங்காவில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் அதி நவீன இயந்திரங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த சாக்லேட் தயாரிப்புக் கூடம் அமைக்கப்பட்டு தற்போது சாக்லேட் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சத்யா, ஏற்காடு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:

சாக்லேட் தயாரிப்புக்கு மிக முக்கியமான பொருளாக கோகோ பீன்ஸ் உள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் முந்திரி மற்றும் கோகோ அபிவிருத்தி இயக்குநரகம் ஆகியவை சார்பில் தமிழகத்தில் விவசாயிகள் மூலம் கோகா பீன்ஸ் பயிரிடப்படுகிறது.

ஏற்காடு, அயோத்தியாப் பட்டணம், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் சுமார் 250 ஏக்கரில் கோகோ பீன்ஸ் பயிரிட்டு வருகின்றனர். இதனால், ஏற்காட்டில் தொடங்கப்பட்டுள்ள சாக்லேட் தயாரிப்புக் கூடத்துக்கு தேவையான கோகோ பீன்ஸ், மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக, இயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயிகளிடம் இருந்து, தரமான கோகோ பீன்ஸ் கொள்முதல் செய்யப்படுகிறது.

கோகோ பீன்ஸ் நவீன இயந்திரங்களில் வறுக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, சாக்லேட் தயாரிப்புக்கான மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. கோகாவுடன், கோகோபட்டர், சர்க்கரை ஆகியவை கலக்கப்பட்டு, டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் என இரு சுவைகளில் தயாரிக்கப்படும் சாக்லேட், ஹார்ட்பீட் என்ற பெயரில் 50 கிராம் பார், 50 கிராம் சாக்லேட் என இரு பேக்கிங்களில் விற்பனை செய்யப்படுகிறது.டார்க் சாக்லேட் 50 கிராம் ரூ.50-க்கும், மில்க் சாக்லேட் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காக்கள், தோட்டக்கலைத் துறை விற்பனை அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம், வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சாக்லேட் தேவைப்படுபவர்கள், hortichoco@gmail.com என்ற இணையதள முகவரியில் முன்கூட்டியே தொடர்பு கொண்டால், அவர்களது முகவரிக்கு சாக்லேட் அனுப்பப்படும். மாதம் 50 கிலோ சாக்லேட் உற்பத்தி நடைபெறுகிறது. விரைவில், நட் சாக்லேட் உள்ளிட்ட பல வகை சாக்லேட் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்