திருவாரூர் மாவட்டத்தில் எந்தச் சூழ்நிலையிலும் களத்துக்குச் சென்று பணியாற்ற அரசு அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். ஆட்சியர் வே.சாந்தா முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மொத்தம் 689 அலுவலர் கள் அடங்கிய 151 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடத்துக்கு எந்தச் சூழ்நிலையிலும் சென்று பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நீச்சல் பயிற்சி பெற்ற 105 காவலர்கள் மற்றும் 20 ஊர்க் காவல் படையினர், 30 தீயணைப்பு வீரர்கள், 3,180 முதல்நிலை பொறுப்பாளர்கள், 24 பாம்பு பிடிப்பவர்கள், 424 கால்நடைகளுக்கான முதல்நிலை பொறுப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் காலிச் சாக்குகள், 15,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் அவசர உதவிக்கு 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago