வன உரிமைச் சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தி.மலை மாவட்டம் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். காட்டுநாயக்கன் மற்றும் இருளர் இன மக்களுக்கு கால தாமதம் இல்லாமல் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு மற்றும் ஏலகிரி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு எஸ்டி ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என கடந்த ஒரு வாரமாக வீடுகள் முன்பாக கருப்புக்கொடி கட்டி நூதனப்போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இந்நிலையில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் லட்சுமணராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காத்திருப்புப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கர்க் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, விரைவில் வன உரிமைச்சட்டத்தின் கீழ் பட்டா வழங்கவும், ஜாதிச்சான்றிதழ் வழங்கவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.
இதனையேற்று, மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட் டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கர்க் நேற்று ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாடு பகுதிக்கு சென்று ஆய்வு செய்து 70 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கினார். அப்போது திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் உடனிருந்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, விவசாய சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் நரசிம்மன், மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.பின்னர், ஜாதி சான்றிதழ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சார் ஆட்சியர் இளம்பகவத்திடம் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago