நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் முதல் கூட்டம், ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று ஆட்சியர் பேசும்போது, "நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், காபி, மிளகு, ஊட்டி வர்க்கி, கேரட், அயல்நாட்டு காய்கறிகள் மற்றும் தோடா சால்வை போன்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கைவினைக்கலைஞர்களை ஏற்றுமதியாளர்களாக உருவாக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டத்தை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து, எதிர்வரும் கூட்டங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பா.சண்முக சிவா, வெளிநாட்டு வர்த்தக உதவி இயக்குநர் எம்.விஜயலட்சுமி, மண்டல அலுவலர்கள் ரவீந்திரா, தங்கம் ராமசந்திரன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் குறு, சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநர் (தேயிலை வாரியம்) எம்.ரமேஷ், துணை இயக்குநர் (காபி வாரியம்) எம்.கருத்தமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.சத்தியராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago