காணாமல் போனவர்களைக் கண்டறியும் சிறப்பு முகாம் காவல் துறை சார்பில் நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 257 பேர் காணாமல் போய் உள்ளதாக காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாயமானவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் ஈரோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், கோபி ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. ஈரோட்டில் நடந்த முகாமில் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, டிஎஸ்பி ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் வீட்டிலிருந்து மாயமாகி, பல ஆண்டுகளாக கண்டு பிடிக்க முடியாதவர்கள், சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் போன்றோரின் உறவினர்களை போலீஸார் வரவழைத்தனர். மாநிலம் முழுவதும் சமீபத்தில் நடந்த சாலை விபத்துகளில் இறந்து போன அடையாளம் தெரியா தவர்கள், சாலையோரம் சுற்றித்திரிந்து வருபவர்கள், காப்பகத்தில் இருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோ ரின் புகைப்படங்களைக் காட்டி அடையாளங்கள் ஒப்பிடப்பட்டு, உறவினர்களிடம் காண் பிக்கப்பட்டது.
இதில் சிலர் மட்டும் அடையாளம் காணப்பட்டனர்.
சேலத்தில் முகாம்
சேலம் மாநகர காவல்துறை சார்பில் அழகாபுரத்தில் நடந்த முகாமை, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். மாநகர காவல் துணை ஆணையர்கள் செந்தில், சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சேலம் மாநகரில் இதுவரை 210 பேர் காணாமல் போனதாக புகார்கள் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத 250 பேர் உயிரிழந்துள்ளனர் என முகாமில் தெரிவிக்கப்பட்டது.சேலம் குமாரசாமிப்பட்டியில் மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த முகாமுக்கு எஸ்பி தீபா காணிகர் தலைமை வகித்தார். முகாமை டிஐஜி பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.சேலம் மாவட்ட காவல்துறையில் காணாமல் போனவர்கள் குறித்த 174 புகார்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தருமபுரியில் 102 வழக்குகள்
தருமபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்த முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமை வகித்தார்.மாவட்டத்தில் பதிவாகியுள்ள, காணாமல் போனவர்கள் பற்றிய 102 வழக்குகள் தொடர்புடைய நபர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை நேரில் அழைத்து நேற்றைய முகாமில் பல்வேறு தகவல்கள் கேட்டறியப்பட்டன.
கிருஷ்ணகிரியில் காணாமல் போனவர்களை கண்டறிவது தொடர்பாக காவல்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஏடிஎஸ்பி ராஜூ இந்த முகாமுக்கு தலைமை வகித்தார். 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காணாமல் போன 183 பேர் போலீஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.இதில் 137 பேரின் உறவினர்களும், குடும்பத்தாரும் நேற்றைய சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
காணாமல் போன 19 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். குறிப்பாக, 2016-ம் ஆண்டு அஞ்செட்டியில் இருந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் காணாமல் போன நாகா (24) என்ற பெண் கோவை தனியார் மருத்துவமனையில் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago