செங்கிப்பட்டி அருகே மர்மமான முறையில் வயல்களில் இறந்துகிடந்த வெளிநாட்டு பறவைகள்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட் டியை அடுத்த கரியப்பட்டி கிராமத்தில் ஆண்டாள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரையிலும், அதனருகே உள்ள வயல்களிலும் நேற்று காலை வெளிநாட்டுப் பறவையான நீர் வாத்துகள் ஏராளமானவை மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தகவலறிந்து வந்த வனத் துறையினர், இறந்து கிடந்த பறவைகளை மீட்டு, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து, புதைத்தனர். தொடர்ந்து, பறவைகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டாள் ஏரிக்கு ஆண்டு தோறும் பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் வருவது வழக்கம். வடுவூர், கோடியக்கரை சரணாலயத்தில் இருந்தும் வெளிநாட்டுப் பறவைகள் வரும். கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கரையில் மர்மமான முறையில் பறவைகள் இறந்துகிடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்தப் பறவைகளை சிலர் வேட்டையாடியும் வருகின்றனர். இந்தப் பறவைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இனியும் இதுபோன்று நிகழாமல் தடுக்க ஆண்டாள் ஏரி பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்