காரைக்காலில் உள்ள தற்காலிக நேரு மார்க்கெட்டில் காய், கனி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு வியாபாரிகள் கோரிக்கை

By வீ.தமிழன்பன்

காரைக்காலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நேரு மார்க் கெட்டிலிருந்து, கரோனா பரவலை தடுப்பதற்காக இடமாற்றம் செய்யப் பட்ட காய், கனி கடைகளை, மீண்டும் பழைய இடத்திலேயே அமைக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்காலில் 1852-ம் ஆண்டு பிரெஞ்சு கட்டிடக் கலை அம் சத்துடன் கட்டப்பட்ட நேரு மார்க்கெட் வளாகம் சிதிலமடைந்த நிலையில், அதை இடித்துவிட்டு பழமை மாறாமல் புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே வாரச் சந்தை இருந்த இடத்தில் தற்காலிகமாக நேரு மார்க்கெட் அமைக்கப்பட்டு, கடைகள் அனைத்தும் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்த இடத்தில் இடநெருக்கடி இருந்து வந்த நிலையில், கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டதால், அங்கிருந்த காய்கறி மற்றும் பழக்கடைகள் மட்டும், அதே இடத்தின் பின்பகுதியில் திறந்தவெளியாக உள்ள மூன்று கிணற்று வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. அங்கு மணற்பரப்பில் பாலித்தீன் ஷீட்களால் மேற்கூரை அமைக்கப் பட்டு, அதன் கீழ் தற்போது வரை காய், கனி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தற்போது காய், கனி கடைகள் அமைந்துள்ள பகுதி சேறும், சகதியுமாகி வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தற்காலிக நேரு மார்க்கெட் அமைந்துள்ள பகுதியிலேயே காய், கனி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நேரு மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.எம்.செல்லாப்பா கூறியது:

தற்போது காய், கனி கடைகள் அமைந்துள்ள இடம் மழை காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், கடைகளை நடத்த முடியாமல் வியாபாரிகளும், காய், கனி வாங்க வரும் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை சமயத்தில்கூட சரிவர வியாபாரம் நடைபெறவில்லை. எனவே, புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, கடந்த அக்.16-ம் தேதி புதுச்சேரி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய நேரு மார்க்கெட் வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்படும் வரை, தற்காலிக நேரு மார்க்கெட் அமைந்துள்ள இடத்திலேயே காய், கனி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். எங்களின் கோரிக்கை குறித்து ஆட்சியரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷிடம் கேட்டபோது, “வியாபாரிகளின் கோரிக்கை தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்