மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாநில வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி ஆகியோர் உதவித்தொகை வழங்கினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரு வாய்த் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வி.எம். ராஜலெட்சுமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினர். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கு முதல்கட்ட தேவைக்காக தலா ரூ. 1 லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் இன்ப துரை, முருகையாபாண்டியன், நாராயணன், வருவாய் அலுவலர் பெருமாள் பங்கேற்றனர்.
புயல் வீரியம் கண்காணிப்பு
செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை யொட்டி தமிழகம் முழுவதும் 4,133 பகுதிகள் பாதுகாப்பற்ற பகுதிகளாக கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், புயலின் வீரியம் குறித்து 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தாழ்வான மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் மக்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அரசின் உத்தரவுகளையும், வழிகாட்டுதலையும் புயல் நேரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மாநிலத்தில் 36 வருவாய் மாவட்டம் மற்றும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் மூலம் 47 சதவீதம் குடிநீர் தேவைக்கும், விவசாய தேவைக்கும் தண்ணீர் கிடைக்கும். குளங்கள், ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு உள்ளதால் நிரம்பி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago