டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடுவது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை (நவ.23) முதல் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை நேரத்தில் ஆறுகளில் தண்ணீர் வந்தால் மழை நீருடன், பாசன நீரும் கரைபுரண்டோடினால் கரைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், பொதுப்பணித் துறையினர் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறப்பதை நேற்று மாலை முதல் நிறுத்தியுள்ளனர். மேலும், கல்லணைக் கால்வாயில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 2,703 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று மாலை 1,011 கன அடியாக குறைக்கப்பட்டது.
அதேநேரத்தில், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூருக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 10,198 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதிலிருந்து 1,001 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 97.49 அடியாக இருந்தது. நீர்வரத்து கணிசமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் நாளொன்றுக்கு 1 அடி வீதம் கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago