திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, கடந்த 16-ம் தேதி மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல்கள் வாக்குச்சாவடி மையங்கள்,வாக்காளர் பதிவு அலுவலகங்களான சார் ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க முதற்கட்ட சிறப்பு முகாம், திருப்பூர் மாவட்டத்தில் இன்றும் (நவ.21), நாளையும் (நவ.22) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல்பிரிவு அதிகாரிகள் கூறும்போது, "8 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 2,493 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில், மேற்குறிப்பிட்ட 2 தினங்களில் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதிதாக வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6, இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க படிவம் 7, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ-ல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்குச்சாவடிமையங்களில் படிவங்களைப் பெற்று கொள்ளலாம். இதேபோல, டிசம்பர் 12, 13ஆகிய தேதிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago