திருப்பூரில் குடியிருப்பு பகுதி அருகே இரவோடு இரவாக புதிதாகஅமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர் பூலுவபட்டி அருகே அம்மன் நகரில் ஏற்கெனவே இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், குடியிருப்பு பகுதிகள் அருகே மேலும் ஒரு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை பிரதான சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "அம்மன் நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள காமராஜர் நகர் பகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கெனவே இரண்டு மதுக்கடைகள் இருக்கின்றன.
தற்போது, புதிதாக நேற்று முன்தினம் இரவோடு, இரவாக ஒரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பட்டுவரும் மதுக்கடைகளால் பெண்கள், குழந்தைகள் அவதிப்பட்டுவரும் சூழ்நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள கடையால் மேலும் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும்" என்றனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், திருமுருகன்பூண்டி போலீஸார் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுக்கடை திறக்கப்பட்டது குறித்து டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் உரிய முறையில் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago