திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வரும் தக்காளி

தொடர் மழையால் தக்காளி பழங்கள் செடிகளிலேயே சேதம் அடைந்து வருவதால், கடந்த 2 மாதங்களுக்கு பிறகுப் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மட்டுமன்றி, திண்டுக்கல், பழநி, அய்யலூர், வேடசந்தூர் பகுதிகளில் ஆங்காங்கே தக்காளிக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டில், விவசாயிகள் விளைவிக்கும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

வடகிழக்குப் பருவ மழை தாமதம் காரணமாக, தக்காளி விளைச்சலுக்கு ஏற்ப அதிக மழையின்றி தட்பவெப்பநிலை நிலவியதால், விளைச்சல் அதிகரித்து கடந்த 2 மாதங்களாக விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலை கிடைத்து வந்தது.

மொத்த மார்க்கெட்டில், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைவாக ஒரு கிலோ ரூ. 3-க்கு பெறப்பட்டது. வெளிமார்க்கெட்டில் குறைந்தபட்சமாக ஒரு கிலோ ரூ.10 வரை விற்பனையானது. இந்தநிலை 2 மாதங்களாக தொடர்ந்தது. தீபாவளி வரை வெளிமார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையானது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கியதால் செடிகளில் காய்த்துள்ள தக்காளி பழங்கள் வெடித்து சேதமடையத் தொடங்கி உள்ளன. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த 2 நாட்களாகக் குறைந்துள்ளது. இதனால் தேவை அதிகரித்திருக்கும் நிலையில் வரத்து இல்லாததால், நேற்று ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.150 முதல் ரூ. 280 வரை விற்றது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்றது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்றது. தொடர்ந்து மழை இருக்கும்பட்சத்தில் தக்காளி வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது. இனி தக்காளி விலை ஏறுமுகத்தில் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்