விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனகுந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பணிகள் தொடங்கப்பட உள்ளன. விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாலையோரமாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறியும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனையறிந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு ஆகியோர் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகளிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த தருமபுரி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) தணிகாசலம், முதுநிலை பொறியாளர் உமாராணி, ஓசூர் டிஎஸ்பி முரளி, வட்டாட்சியர் பூவிதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆட்சேபனை மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago