தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி, இன்று (21-ம் தேதி) முதல் நடக்க உள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியது:

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், நவம்பர் 21-ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்புப் பணி நடக்க உள்ளது.

மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டுநிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு பேசினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது.

டிசம்பர் மாதம் 10- ம் தேதி வரை நடக்கவுள்ள இக்கணக்கெடுப்பினை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மேற்கொள்ளவுள்ளனர்.

மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய குடியிருப்பு பகுதிகளிலும் இக்கணக்கெடுப்பு பணி நடைபெறும். இக்கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் குழந்தை களில், 6 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் உரிய வகுப்புகளில் சேர்ந்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயப்பணி நடக்கும் இடங்களில் வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த கணக்கெடுப்பு நடக்கவுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்