நெல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு பயிர்க் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதலில் விவ சாயிகளிடமிருந்து ரூ.324 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசா ரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் உள்ளிட்டோரும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் உதவி அலுவலகங்களிலிருந்து விவசாயிகளும் பங்கேற்றனர்.

கும்பகோணம் வேளாண்மை உதவி அலுவலகத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டம் தொடங்கும் முன்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயி களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.100 கட்டாயமாக லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதன்படி கொள்முதல் செய்யப்பட்ட 32.40 லட்சம் டன் நெல்லுக்கு விவசாயி களிடமிருந்து லஞ்சமாக ரூ.324 கோடி பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருவையாறில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக குறுவை, சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும், குடமுருட்டி தலைமடை பகுதியில் உள்ள திருத்துங்கல் வாய்க்கால், கோனேரிராஜபுரம் வாய்க்காலுக்கு தண்ணீர் விடாத அதிகாரிகளை கண்டித்தும் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து, பின் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அம்மாபேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்தும், தூர்வாரும் பணிகளை முறையாக செய்யாததைக் கண்டித்தும், பயிர்க் கடன், நகைக் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கூட்ட அரங்கிலேயே விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூதலூரில் நடைபெற்ற கூட்டத்தில், சரபங்கா உபரி நீர் திட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தும் அதே நேரத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்னியாறு கோட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. பூதலூர் பகுதியில் யூரியா உரத்தட்டுப்பாடு அதிகம் உள்ளதை போக்க வேண்டும். இப்பகுதியில் காலந்தாழ்த்தி பயிர் சாகுபடி செய்வதால், அதற்கேற்ற வகையில் பயிர்க் காப்பீடு செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதேபோல, மாவட்டத்தில் பிற வட்டாரங்களிலும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கை களை காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதற்கு ஆட்சியர் ம.கோவிந்தராவ், வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் ஆகியோர் பதிலளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்