இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாத திருப்பூர் மாநகராட்சி

கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய, ரூ. 23 கோடியே 67 லட்சம் மின் கட்டணத்தை செலுத்தாமல் திருப்பூர் மாநகராட்சி பாக்கி வைத்துள்ளதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிமுதல் திருப்பூர் மாநகராட்சியாக செயல்படத் தொடங்கியது. 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதேபோல முத்தணம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி உட்பட 8 ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகளாக தற்போது செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியின் தெருவிளக்கு, குடிநீர் திட்டங்கள், மண்டல மற்றும் பிரிவு அலுவலகங்கள், மாநகராட்சி பள்ளிகள், சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 300 மின் இணைப்புகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பின், தற்போதுவரை மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியத்தினர் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சிக்கு மின் கட்டணத்துக்குவந்த தொகையை, பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதால், மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டியதொகை செலுத்தப்படாமல் உள்ளது.

தெருவிளக்கு, குடிநீர் விநியோகம் என மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மின் இணைப்புடன் இருப்பதால், பாக்கி வைத்துள்ள பெரும் தொகையை காரணம்காட்டி இணைப்பை துண்டிக்கவும் முடியவில்லை. மாநகராட்சி தரப்பில் குடிநீர் மற்றும் வீட்டுவரி வசூல்ஆகவில்லை என்கின்றனர். மின்வாரியத்திலும் பல்வேறு செலவினங்கள் இருப்பதால்,சமாளிப்பதற்கு பெரும்பாடாகிவிடுகிறது’’ என்றனர்.

திருப்பூர் மின்வாரிய செயற் பொறியாளர் எஸ். ஜவஹர் கூறும் போது, ‘‘கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, மின்கட்டணம் செலுத்தவில்லை. ரூ. 23 கோடியே 67 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். மாநகராட்சிக்கு சுமார் 300 இணைப்புகள் உள்ளன. மின்சாரக் கட்டணத்தை செலுத்த மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சிக்கு, பொது மக்களிடம் இருந்து வர வேண்டிய வரி ஏராளமாக நிலுவையில் உள்ளது. கரோனா மற்றும் சிக்கன நடவடிக்கை காரணமாக 40 சதவீதம் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. நிதிநிலை சீரானதும், மின் கட்டணத் தொகை முழுமையாக செலுத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்