திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன் (60). திருப்பூர் வாலிபாளையம் பகுதியிலுள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 13-ம் தேதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காஜா மைதீன் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.
அதே நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்துவந்த புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி மேட்டுபட்டியைச் சேர்ந்த எம்.பழனிசாமி (26) என்பவருக்கான அறையை காஜா மைதீனுக்கு நிறுவன நிர்வாகத்தினர் அளித்துள்ளனர். இதனால், காஜா மைதீன் மீது பழனிசாமி அதிருப்தியில் இருந்துள்ளார். கடந்த 15-ம் தேதி பழனிசாமி தனக்குரிய பொருட்களை அறையிலிருந்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார். இதுதொடர்பாக பழனிசாமிக்கும், காஜா மைதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பழனிசாமி மற்றும் அவரது நண்பர்களான அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த புதுக்கோட்டை கைக்குறிச்சி ஆலங்குடி கேப்பரையைச் சேர்ந்த எஸ்.முருகேசன் (25), மேட்டுபட்டியைச் சேர்ந்த ஆர்.சக்திகணேஷ் (23), கைக்குறிச்சி திருமலைராய சமுத்திரத்தைச் சேர்ந்த எஸ்.கார்த்தி (25) ஆகியோர் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே காஜா மைதீன் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார், தொடர் விசாரணை நடத்தி புதுக்கோட்டையில் 4 பேரையும் நேற்று முன்தினம் பிடித்து, விசாரணைக்கு பிறகு நேற்று கைது செய்தனர்.
கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, தொடர்புடையவர் களை கைது செய்த வடக்கு காவல் நிலைய போலீஸாரை, மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago