தமிழக பகுதிகளில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் பகுதிகள் ரூ.24 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை குடிநீர் தேவைக்காக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கிடையே தெலுங்கு - கங்கை ஒப்பந்தம் கடந்த 1983-ம் ஆண்டு போடப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் ஆந்திர அரசு, தமிழகத்துக்கு அளிக்கவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீரை, ஆந்திர மாநிலம்-கண்டலேறு அணையிலிருந்து, திருவள்ளூர் மாவட்டம் - பூண்டி ஏரிக்கு கொண்டுவருவதற்காக 177.275 கி.மீ தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி கடந்த 1983 முதல் 1996-ம் ஆண்டுவரை நடைபெற்றது. இதையடுத்து, 1996-ம்ஆண்டு முதல், கிருஷ்ணா நதிநீர்,தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகப் பகுதிகளில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிகள் அவ்வப்போது பெய்யும்பெருமழையின் போது, சேதமடைவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு சேதமான பகுதிகளில் சிறு சிறு பகுதிகளை மட்டுமே அவ்வப்போது பொதுப்பணித் துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
இச்சூழலில், 2014 -ம் ஆண்டுசட்டப்பேரவையில், 110 விதியின்கீழ், இரு கட்டங்களாக கிருஷ்ணா கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெறும் என, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, முதல்கட்டமாக, தமிழகப் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயின் ஒருபகுதி கடந்த 2015-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது.
அடுத்து 2-வது கட்டமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஜீரோ பாயின்ட் முதல் பூண்டிஏரிவரையான கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில், 2-வது கட்டமாகஊத்துக்கோட்டை - அம்பேத்கர் நகர் முதல் கலவை வரை உள்ள,சேதமடைந்த கால்வாய் பகுதிகளை ரூ.24 கோடி மதிப்பில் சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. சுமார் ஓராண்டு காலத்துக்குள் நடைபெற உள்ள இப்பணிகள், கால்வாயின் இருபுறமும் நடைபெறஇருக்கிறது.
இதில், மிகவும் சேதமடைந்த மண்ணின் தாங்கும் திறன் குறைவாக உள்ள பகுதிகளில் அதிகப்படியான மண்ணை அகற்றிவிட்டு கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட உள்ளன. சேதமடைந்த பகுதிகளில், அகலம் குறைவான சாய்வு விகிதத்துடன் கூடிய சேதமடைந்த சிமென்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, அகலம் அதிகமான சாய்வு விகிதத்துடன் கான்கிரீட் பேவர் எந்திரம் மூலம் கான்கிரீட் லைனிங் அமைக்கப்பட இருக்கிறது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago