திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடடைந்து மண்வளம் குன்றுகிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிகின்றன. இதைத் தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி மண்வளத்தைப் பாதுகாக்கலாம்.
அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய நுண்ணுயிரிகள் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை மண்ணில் நிலைப்படுத்தி, தழைச்சத்தாக மாற்றி வளரும் பயிருக்கு அளிக்கின்றன. பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிட்டா நிலையிலுள்ள மணிச் சத்தைக் கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்கிறது.
மேலும், திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்துவதுடன், பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைகிறது.
ஆகவே, மாவட்ட விவசாயிகள் கூடுதல் மகசூல்பெற, திரவ உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago