உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா, நீதித் துறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்தமார்ச் இறுதியில் மூடப்பட்ட உயர்நீதிமன்றம் 8 மாதங்கள் ஆகியும்இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. ஒருசில அமர்வுகளில்நேரடி விசாரணையும், பெரும்பாலான அமர்வுகளில் காணொலியிலும் அன்றாட விசாரணை நடந்து வருகிறது. இது இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என்று தெரிகிறது.
ஆன்லைனில், குறிப்பாக காருக்குள் இருந்துகொண்டே வழக்குகளை எளிதாக கையாளும் ஒருவிதபுது அனுபவத்தை வழக்கறிஞர்களுக்கு இந்த கரோனா காலகட்டம் கற்றுக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும். ஆனால், இந்தநடைமுறையில், வழக்கறிஞர்களுக்கு சாதகமும், பாதகமும் சரிசமமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியிருப்பதாவது:
வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகன்: கரோனா காலகட்டத்தை புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியும், இ-கோர்ட் தலைவருமான டி.ஒய்.சந்திரசூட் ஏற்கெனவே தெரிவித்தார். அதற்கேற்ப, அதிவேக இணைய வசதி, ஸ்கேனர், பிரின்ட்டர், கணினி, ஹெட்ஃபோன், ஒலி மாசு இல்லாத தனி அறை என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள வழக்கறிஞர்களுக்கு இந்தகாணொலி விசாரணை தொழில்நுட்ப ரீதியாக நிச்சயம் வரப்பிரசாதமே. இடத்தைவிட்டு நகராமல், உச்ச நீதிமன்றத்தில்கூட வாதத் திறமையை வெளிப்படுத்தலாம். அர்னாப் கோஸ்வாமி வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஹரீ்ஷ் சால்வே லண்டனில் இருந்து வாதிடுகிறார் என்றால் நிச்சயமாக இந்திய நீதித் துறை அடுத்த மைல்கல்லை நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்கு நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். முன்கூட்டியே நேர வாரியாக திட்டமிட்டு வழக்குகளை பட்டியலிட்டு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அளவுக்கு நீதித் துறை புரட்சிகரமாக பல விஷயங்களை திட்டமிட்டு வருகிறது. கட்சிக்காரர்களும் விசாரணையை ஆன்லைனில் காண முடியும் என்பது கூடுதல் வசதி. முன்பெல்லாம் நீதிபதிகள் அதிக வழக்குகளை பட்டியலிட்டு, சொற்பவழக்குகளுக்கே தீர்வு காண்பார்கள். தற்போது காணொலிமூலம் குறைந்த எண்ணிக்கையில் வழக்குகள் பட்டியல் இடப்பட்டாலும், தீர்வு காணப்படும் வழக்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்: ஆன்லைனில் வழக்குகளை தாக்கல் செய்வதற்காக, ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கே ஒரு வழக்கறிஞர் அதிகம் செலவிடவேண்டி உள்ளது. அதிக காலவிரயமும் ஏற்படுகிறது. ஒரு வழக்குஉயர் நீதிமன்ற பதிவுத் துறையில் நம்பராகி, பட்டியலுக்கு வருவதற்கு 6 முதல் 7 அலுவலக பிரிவுகளை தாண்ட வேண்டும். எனவே,நேரடியாக வந்து பணியாற்றுவதுதான் வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்களுக்கு வசதி.தவிர, வழக்கறிஞர்கள் காணொலியில் அதிக நேரம் செலவழிக்க நேரிடுகிறது. நாள் முழுவதும் வீடியோ, ஆடியோவை கவனித்துக்கொண்டே வழக்குகளை விசாரிப்பது நீதிபதிகளுக்கும் பெரும் சுமையாக உள்ளது. சிலநேரம், தொழில்நுட்பக் கோளாறால், வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முழுமையாக முன்வைக்க முடியாமல் போகும் சூழலில், ஒன்று அந்த வழக்கு வாய்தாவில் முடிகிறது. அல்லது, எதிர் தரப்புக்கு சாதகம் ஆகிவிடுகிறது. நேரடி விசாரணையில், வாதத்துக்கு தேவையான ஆவணங்களை உடனுக்குடன் நீதிபதிகளிடமும், எதிர் தரப்பினரிடமும் சமர்ப்பிக்க முடியும். காணொலியில் அதற்கு வாய்ப்பேஇல்லை. மூத்த, வசதியான வழக்கறிஞர்களுக்குதான் இது சவுகரியமானது. தற்போது வழக்குகள் எண்ணிக்கையும் பாதியாககுறைந்துவிட்டதால் பல வழக்கறிஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். சீனியர்களிடம் தொழில் கற்கும் வாய்ப்பு கிடைக்காமல் இளம் வழக்கறிஞர்கள் பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்த நிலைமை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago