கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 7 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை ஆணை கிடைத்துள்ளது.
தமிழக அரசு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்தியதால் 313 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஸ்வநாதனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஊத்தங்கரை அரசுப்பள்ளி மாணவி வைஷ்ணவிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், கெலமங்கலம் அரசு மாதிரி பள்ளி மாணவி எஸ்.வைஷ்ணவிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
ஒரப்பம் அரசுப் பள்ளி மாணவி கலையரசிக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஊத்தங்கரை அரசுப் பள்ளி மாணவி மகாலட்சுமிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஊத்தங்கரை அரசுப் பள்ளி மாணவர் புரூஸுக்கு, திருச்சி மருத்துவக் கல்லூரியிலும், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்வேதாவுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார்.
ஓசூர் அரசுப்பள்ளி மாணவி ஸ்வேதாவின் தந்தை மகிமைதாஸ் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மகளான ஸ்வேதாவுக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்க்கை ஆணை கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லதா கூறும்போது, ‘‘எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடினமாக உழைத்து வந்த மாணவி ஸ்வேதா நீட் தேர்வில் 208 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் முதலிடமும், தற்போது எம்பிபிஎஸ் சேர்க்கை ஆணையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவி ஸ்வேதா 6-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் படித்துள்ளதால் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டில் தகுதி பெற காரணமாக அமைந்துள்ளது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் முடிவால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சாத்தியமாகி உள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago