போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் காய்கறிகள் பதப்படுத்தும் பணியை ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

போச்சம்பள்ளியில் ரூ.51 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் காய்கறிகளைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மகளிர் திட்டம் சார்பாக ரூ.6.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். புதிய கட்டுமானப் பணிகள், தார் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். 3 பயனாளிகளுக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வாங்க ஆணைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து போச்சம் பள்ளியில் வேளாண்மைத்துறை சார்பாக ரூ.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் காய்கறிகள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை பார்வையிட்டு, அதில் சிப்பம் கட்டுதல் அறை, காய்கறி தரம் பிரித்தல், கழுவுதல் இயந்திரம், நீராவி மூலம் கிருமிகள் நீக்கும் இயந்திரம், காய்கறிகள், வாழைப்பழம், மாம்பழம் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும் விரைவு குளிரூட்டும் அறையையும், மாம்பழம், வாழைப்பழங்கள் பழுக்க வைக்கும் அறையையும் ஆய்வு செய்தார்.

மேலும், அம்மா விரிவாக்க ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆன்-லைன் படிவம் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின் போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குநர் ஜெயராமன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அருள்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்