உலக பாரம்பரிய வார தொடக்க விழா தஞ்சை பெரிய கோயிலில் நேற்று நடைபெற்றது.
இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் சார்பில், உலக பாரம்பரிய வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை வகித்து, விழாவை தொடங்கிவைத்தார். தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ் வர வேற்றார்.
விழாவில் காவல் கண்காணிப் பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், அரண்மனை தேவஸ் தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
‘பாரம்பரிய நகரம் தஞ்சை' என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பேசினார். முடிவில், திருச்சி வட்ட உதவி தொல்லியலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
தொடர்ந்து, பாரம்பரிய சின்னங் களைப் பாதுகாக்க வலியுறுத்தி, சரபோஜி கல்லூரி என்சிசி மாணவர்கள் பங்கேற்ற பாரம்பரிய விழிப்புணர்வு மரபு நடைபயணம், பெரிய கோயிலிலிருந்து தொடங்கி ஆயுதப்படை மைதானம், நீதிமன்ற சாலை, காந்திஜி சாலை, ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, சோழன் சிலை வழியாக சென்று, சிவகங்கை பூங்கா அருகே உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பின்னர், தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா இந்தியா முழுவதும் உலக, தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருச்சி வட்டம் சார்பில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
தொல்லியல் துறையின் திருச்சி வட்டத்தில் திருச்சி முதல் கன்னியாகுமரி வரை 162 புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கவனிக் கப்படாத வரலாற்றுச் சின்னங்கள் பல இடங்களில் உள்ளன. அவற்றில், புராதனச் சின்னங்கள் அதிகமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
பெரிய கோயிலின் கோபுரத் தில் உள்ள ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது தவறு. அனைத்து ஓவியங் களும் நகல் எடுக்கப்பட்டு, காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். பாரம்பரியச் சின்னங் களை பாதுகாத்து, அவற்றின் வரலாறு, சிறப்புகளை தெரிந்து கொண்டு, அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளது.
சிலை கடத்தல் என்பது இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலக அளவில் பெரும் சவாலாக உள்ளது.
அவ்வாறு கடத்தப்பட்ட சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் மீட்கப்பட வேண்டிய தமிழக கோயில் சிலைகள் இன்னும் உள்ளன. தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago