கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி துவரை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதால், மானாவாரி துவரை சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். நிகழாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 982 ஏக்கரில் துவரை சாகு படியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 20 சதவீதத்துக்கு மேல் சாகு படி பரப்பு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘மழையை நம்பி மட்டுமே துவரை விதைக்கப் படுகிறது. தற்போது பெய்துள்ள மழையால் துவரை செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. தற்போது பச்சை துவரைக் காய்கள் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. துவரை பயிரிட ஒரு ஏக்கருக்கு நிலத்தை உழுதல், விதை, மருந்து உள்ளிட்டவை அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 600 கிலோ வரை துவரை மகசூல் கிடைக்கும். தற்போது பூ காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால், வேளாண்மைத்துறை அலுவலர்கள் எளிய தொழில் நுட்பங்களை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளனர், ’’ என்றனர்.
இதுதொடர்பாக எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய மண்ணியல் விஞ்ஞானி குணசேகரன், வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா ஆகியோர் கூறும்போது, ‘‘ஒரு ஏக்கருக்குத் தேவையான 4 கிலோ டிஏபி-யை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் டிஏபி கரைசலின் படிவுகள் அல்லது திப்பிகள் ஏதுமின்றி நன்கு தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி, அதனை 190 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் மாலை வேளைகளில் மட்டும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இல்லையெனில் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும்.
மேலும், 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிப்பதன் மூலம் பூ உதிர்வது தவிர்க்கப் படுவதோடு, அதிக திரட்சியான காய்கள் மற்றும் மணிகள் உருவாகும்.
இதனால் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். மானாவாரி துவரையிலும் ஏக்கருக்கு சாதாரணமாக 550 முதல் 600 கிலோ மகசூல் பெறலாம்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago