லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கை யாளர்களின் நடப்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியது: மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களின் நடப்புக் கணக்குகள் அனைத்தும் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள், என்இஎப்டீ, ஆர்டீஜிஎஸ் ஆகிய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள ஜவுளி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல், காஸ் ஏஜென்சி உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, மத்திய அரசின் ஆதரவின்மை ஆகிய வற்றால் கரூர் உள்நாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கி நடப்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தால் தொழில் துறையினர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
வங்கிகள் மூலமே தொழில் துறையினர் வரவு செலவு செய்வதாலும், பொருளாதார மந்தநிலை காரணமாக யாரிடமும் ஒரு மாதத்துக்கு தேவையான கையிருப்பு இல்லாததாலும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மத்திய அமைச்சகம் தலையிட்டு இப்பிரச் சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago