திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றும் மழை நீடித்தது. காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 117, சேர்வலாறு- 106, மணிமுத்தாறு- 65, நம்பியாறு- 26, கொடுமுடியாறு- 60, அம்பாசமுத்திரம்- 80.40, சேரன்மகாதேவி- 68, ராதாபுரம்- 34, நாங்குநேரி- 43, பாளையங்கோட்டை- 46, திருநெல்வேலி- 42.
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து117.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,813 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 89.50 அடியாக இருந்தது. அணைக்கு 2,992 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 17 அடி உயர்ந்து 135.69 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 13 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 9.35 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 36 அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி அருகே கொங்கந்தான்பாறையில் ராஜ் என்பவரின் வீட்டுச் சுவர் மழைக்கு இடிந்துவிழுந்தது. இதுபோல் மாவட்டத்தில் மேலும் 7 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மாவட்டத்தில் மொத்தம்130 குளங்கள் நிரம்பியிருக்கின்றன. களக்காடு நாங்குநேரியான் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சுப்பிரமணியபுரம் சுந்தரபாண்டியபுரத்தில் இந்த கால்வாயில் நேற்று அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாகநேற்றும் கனமழை நீடித்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை டீன் சி.ரேவதி பாலன் ஆய்வு செய்தார். ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்றுமாலை நிலவரப்படி வைகுண்டம் அணையைத் தாண்டி 1,100 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்குச் சென்றது. வைகுண்டம் வடகாலில் 1,093 கன அடி, தென்காலில் 1,230 கனஅடி, மருதூர் மேலக்காலில் 400 கனஅடி, கீழக்காலில் 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, குளங்களுக்கு செல்கிறது. மாவட்டத்தில் மழைக்கு நேற்று ஒரே நாளில் 5 வீடுகள் சேதமடைந்தன.நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 91, காயல்பட்டினம் 215, குலசேகரன்பட்டினம் 77, விளாத்திகுளம் 48, காடல்குடி 46, வைப்பார் 26, சூரங்குடி 23, கோவில்பட்டி 39, கழுகுமலை 16, கயத்தாறு 68, கடம்பூர் 70, ஓட்டப்பிடாரம் 31, மணியாச்சி 47, கீழ அரசடி10.4, எட்டயபுரம் 76, சாத்தான்குளம் 49, வைகுண்டம் 65, தூத்துக்குடியில் 33 மி.மீ., மழை பெய்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 99 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 95 மி.மீ., சிவகிரியில் 81 மி.மீ., கடனாநதி அணையில் 73 மி.மீ.,தென்காசியில் 72 மி.மீ., செங்கோட்டையில் 71 மி.மீ., கருப்பாநதி அணையில் 62 மி.மீ., ஆய்க்குடியில் 60.06 மி.மீ., அடவிநயினார் அணையில் 58 மி.மீ., சங்கரன்கோவிலில் 48 மி.மீ. மழை பதிவானது.
குற்றாலத்தில் வெள்ளம்
மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்றுமுன்தினம் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலநாதர் கோயிலில் வெள்ளம்புகுந்தது. கோயில் அருகில் உள்ள கடைவீதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இதுவரைகண்டிராத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக குற்றாலம் பகுதி மக்கள் கூறுகின்றனர். பிரதானஅருவி அருகில் உள்ள தடுப்புக் கம்பிகள், பெண்கள் உடை மாற்றும்அறை ஆகியவை சேதம் அடைந்தன. நேற்று 3-வது நாளாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்தது.குண்டாறு அணை மட்டும் நிரம்பியிருந்த நிலையில், 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை, 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை ஆகியவையும் நிரம்பின. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாக இருந்தது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து, 101.50 அடியாக இருந்தது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்கள் நீர்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம். கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாரத்தில் 10 செ.மீ., மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக கொட்டாரத்தில் 10 செமீ மழை பதிவானது. பூதப்பாண்டியில் 32, சிற்றாறு ஒன்றில் 36, கன்னிமாரில் 48, குழித்துறையில் 20, மைலாடியில் 67, நாகர்கோவிலில் 35, பேச்சிப்பாறையில் 44, பெருஞ்சாணி, புத்தன்அணை, சிவலோகம் மற்றும் அடையாமடையில் தலா 27, சுருளகோட்டில் 33, பாலமோரில் 44, மாம்பழத்துறையாறில் 26, ஆரல்வாய்மொழியில் 23, குருந்தன்கோட்டில் 26, ஆரல்வாய்மொழியில் 25 மிமீ மழை பெய்தது.
மலையோரங்களிலும் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,051 கனஅடியும், பெருஞ்சாணிக்கு 713 கனஅடியும், சிற்றாறு ஒன்றுக்கு 200 கன அடி தண்ணீரும் வரத்தாகிறது. பேச்சிப்பாறை அணை 43.58 அடியும், பெருஞ்சாணி அணை 69.55 அடியுமாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடல் பகுதியில் சூறைகாற்றால் கடும் கடல் சீற்றம் நிலவியது. இதனால் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago