மழையால் உழுத நிலமாக மாறிய திண்டுக்கல் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

மழையால் திண்டுக்கல்லில் தற்காலிகமாகச் செயல்படும் காய்கறி மார்க்கெட், தண்ணீர் தேங்கி உழுத நிலம்போல மாறியது. இதனால்,

வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

திண்டுக்கல் மற்றும் இதன் சுற்றுப்புறக் கிராமமக்கள் காய்கறிகள் வாங்க நகரிலுள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு வருகின்றனர். கரோனா காலத்தில் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டதால் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்புப் பணிகளை தொடங்கியது.

பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதால் மார்க்கெட் எதிரே உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக திண்டுக்கல் நகரில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் மைதானத்தில் மழை நீர் தேங்கியது. நேற்று காலை விற்பனைக்குக் காய்களைக் கொண்டுவந்த வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் செல்லமுடியாத அளவுக்கு தற்காலிக கடைகள் முன் தண்ணீர் தேங்கி நின்றதால் சிரமப்பட்டனர். வேறுவழியின்றி கொண்டுவந்த காய்களை விற்பனை செய்ய தேங்கிய மழைநீருக்கு இடையே கடைகளை வைத்தனர்.

காய்கறிகளை வாங்க வந்த மக்களும் மழைநீரால் சகதியான பாதையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

சிலர் மார்க்கெட்டுக்குள் கடை வைக்காமல் சாலையின் இரு ஓரங்களிலும் கடை விரித்து தங்கள் விற்பனையை நடத்தினர்.

காந்தி மார்க்கெட் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து மார்க்கெட்டை வழக்கமான இடத்துக்கு மாற்றினால் மட்டுமே

வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்படுவது தவிர்க்கப்படும்.

மேலும், தற்காலிகமாகச் செயல்படும் விளையாட்டு மைதானப் பகுதியில் மழைநீரை வெளியேற்றி சுகாதாரமான முறையில் வசதிகளை ஏற்படுத்திதர மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்