குருபரப்பள்ளி அருகே விளைநிலங்களை ஒற்றை யானை சேதப் படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப் பள்ளி அடுத்த மேலுமலையைச் சுற்றி எண்ணேகொல்புதூர், கக்கன்புரம், கொத்தபள்ளி, பீக்கனபள்ளி, கீழ் பீக்கனபள்ளி கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஒற்றையானை சுற்றித் திரிகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றையானை, இக்கிராமங்களில் உள்ள பயிர்களைத் தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானையை விரட்ட கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் ஒற்றை யானை 3 நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் நெல் வயல்கள், கரும்பு பயிர்கள், தக்காளி, வாழைத் தோட்டங்கள், பூந்தோட்டங்களில் புகுந்து பயிர்களை காலால் மிதித்து நாசம் செய்கிறது. இதுதொடர்பாக வனத்துறை யினருக்கு தகவல் அளித்தால், வனவர் உட்பட 2 பேர் மட்டுமே யானையை விரட்ட வருகின்றனர். அவர்களும் சிறிது நேரத்தில் சென்றுவிடுவதால், நாங்கள் விடிய விடிய யானையை அச்சத்துடன் விரட்டுகிறோம். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானையால் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago