கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் மைய தடுப்புஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகரில் உள்ள சென்னை சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, காந்தி சாலையின் நடுவில், மைய தடுப்பு (சென்டர் மிடியன்)அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சென்னை சாலையில் தொடங்கியது.
இந்நிலையில், சென்னை சாலையில் பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து பெட்ரோல் பங்க் வரை, ஒரு இடத்தில் 20 அடி நீளத்துக்கு வழிவிட வேண்டும் என லாரி பட்டறை நடத்துபவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர், வழி விட முடியாது எனக் கூறியதால், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் பட்டறை உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், லாரி அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணி தலைமையில், நேற்று காலை சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த நகர காவல் ஆய்வாளர் (பொ) கணேஷ்குமார் மற்றும் போலீஸார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறையிடம் முறையிட்டு வழி விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதி யளித்ததையடுத்து மறியலைக் கைவிட்டனர்.
இதுதொடர்பாக சென்னை சாலை பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், மைய தடுப்பு அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படும். மேலும், 30 அடி பிரிவு சாலைகள் உள்ள இடங்களில் வழிவிட வேண்டும். இங்கு 30-க்கும் மேற்பட்ட லாரி பட்டறைகள் உள்ளன. சாலையின் குறுக்கில் வழிவிடவில்லை என்றால் இங்கு வரும் லாரிகள் சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே ஒரு இடத்தில் மட்டும் தடுப்புகள் அமைக்காமல் வழி விட வேண்டும்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago