பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 10 அடி உயர்வு தூத்துக்குடியில் மழை குறைந்தும் வெள்ளம் வடியவில்லை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.70 அடி உயர்ந்துள்ளது.

இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 101.50 அடியாக இருந்தது. 9,120 கனஅடி தண்ணீர்வந்ததால், நேற்று காலையில் நீர்மட்டம் 9.70 அடி உயர்ந்து, 111.20 அடியாக இருந்தது. 812 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 18.50 அடி உயர்ந்து 118.50 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 3.30 அடி உயர்ந்து 86.10 அடியாக காணப்பட்டது. 2,900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 25 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து12.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.02 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாகவும் இருந்தது.

மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 12.40, சேரன்மகாதேவி- 15, மணிமுத்தாறு- 22.60, நாங்குநேரி- 18, பாளையங்கோட்டை- 7, பாபநாசம்- 21, ராதாபுரம்- 4, திருநெல்வேலி- 9. திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக கடைகள் தொடர் மழையால் சரிந்துவிழுந்தன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில்நேற்று மழையின் தாக்கம் குறைந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் தேங்கிய தண்ணீர் வேகமாக வடியத் தொடங்கியது.

அதேநேரத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் தொடர்ந்து சூழ்ந்துள்ளதால், அப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம்முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதுபோல் நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்காலிக பேருந்து நிலையம், திரு இருதய ஆலய வளாகம், தபால் தந்தி காலனி குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து அகற்றும் பணி துரிதமாகநடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன்,தலைமை பொறியாளர் சேர்மக்கனி, மாநகர நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 14, காயல்பட்டினம் 52.2, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 23, காடல்குடி13, வைப்பார் 47,சூரங்குடி 20, கோவில்பட்டி 73, கழுகுமலை 28, கயத்தாறு49, கடம்பூர் 73, ஓட்டப்பிடாரம் 36,மணியாச்சி 34, வேடநத்தம் 15, கீழஅரசடி 11.5, எட்டயபுரம் 59, சாத்தான்குளம் 66.8, வைகுண்டம் 49.5,தூத்துக்குடி169 மி.மீ. மழை பெய்துள்ளது.

கோவில்பட்டி பகுதியிலும் நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் மழை பெய்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 55 மி.மீ. மழை பதிவானது. சங்கரன்கோவிலில் 53 மி.மீ., சிவகிரியில் 51 மி.மீ., அடவிநயினார் அணையில் 48 மி.மீ., தென்காசியில் 44 மி.மீ., ராமநதி அணையில் 40 மி.மீ., ஆய்க்குடியில் 29 மி.மீ., கடனாநதி அணையில் 26 மி.மீ., குண்டாறு அணையில் 21 மி.மீ., செங்கோட்டையில் 18 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து 76.50 அடியாக இருந்தது. 564 கனஅடி நீர் வந்தது.ராமநதி அணை நீர்மட்டம் மூன்றரைஅடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது. 145 கனஅடி நீர் வந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 62.01 அடியாக இருந்தது. 172 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர் வந்தது. 48 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. குற்றாலம் அருவிகளில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குமரி அணைப்பகுதிகளில் மழையின்றி நீர்வரத்து அதிகரிக்கவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் மேகமூட்டத்துடன் குளிரான தட்பவெப்பம் நிலவியது. அவ்வப்போது சாரல் பெய்தது.

அதிகபட்சமாக மயிலாடியில் 85 மிமீ மழை பெய்திருந்தது. கொட்டாரத்தில் 81 மிமீ, சிற்றாறு ஒன்றில் 28, நாகர்கோவிலில் 37, கன்னிமாரில் 15, பூதப்பாண்டியில் 16, சிவலோகத்தில் (சிற்றாறு 2) 21, சுருளகோட்டில் 11, பாலமோரில் 17, இரணியலில் 14, குளச்சலில் 11, மாம்பழத்துறையாறில் 19, ஆரல்வாய்மொழியில் 29, குருந்தன்கோட்டில் 17, அடையாமடையில் 23, ஆனைகிடங்கில் 19, பேச்சிப்பாறையில் 7, பெருஞ்சாணியில் 8, முக்கடலில் 7 மிமீ மழை பெய்திருந்தது. மலையோரங்களில் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை. பேச்சிப்பாறைக்கு 851 கனஅடியும், பெருஞ்சாணிக்கு 251 கனஅடி தண்ணீரும் வந்தது. நீர்மட்டம் மேலும் உயரவில்லை. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.25 அடியாகவும், பெருஞ்சாணி நீர்மட்டம் 69 அடியாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்