530 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

கோவையிலிருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்பிலான 530 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, திருப்பூர் மாநகர போலீஸார் நேற்று பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை ஆணையர் க.சுரேஷ்குமார் மேற்பார்வையில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. ராயபுரம் பகுதியில் தனிப்படை போலீஸார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 530 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வாகனத்துடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், அதனை கடத்தி வந்த திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவரும், தற்போது திருப்பூர் ஸ்டேட் பாங்க் காலனி பிவிஎஸ் குடியிருப்பில் வசிப்பவருமான வி.தங்கராஜ் (37), திண்டுக்கல் பர்மா காலனியை சேர்ந்தவரும், தங்கராஜுடன் வசித்து வருபவருமான கே.மதன்குமார் (21) ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பொதுவாக வட மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்திவரப்படுகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும், கோவையில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட வியாபாரியின் குடோனிலிருந்து கடத்தி வந்துள்ளனர். திருப்பூர் கொண்டு வந்து ராயபுரத்திலுள்ள குடோனில் பதுக்கிவைத்து, கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.11 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது. அவர்களது குடோனில் நடத்தப்பட்ட சோதனையில், புகையிலை பொருட்கள் இல்லை. இதுகுறித்து குடோன் உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது" 'என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்