ஆட்சியர் அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மத்திய மண்டலத்தில் 98.44 லட்சம் வாக்காளர்கள் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம்

By செய்திப்பிரிவு

ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் 98.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சி, அரியலூர், பெரம் பலூர், கரூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களின் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் நேற்று வெளியிட்டனர். மேலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.சிவராசு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 10,99,977 ஆண்கள், 11,60,256 பெண்கள், 206 இதரர் என மொத்தம் 22,60,439 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில், கடந்த பிப்.14-ம் தேதி முதல் 2,974 ஆண்கள், 3,468 பெண்கள், 6 இதரர் என மொத்தம் 6,448 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். அதேபோல இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக 21,897 ஆண்கள், 21,209 பெண்கள், 9 இதரர் என மொத்தம் 43,115 பேர் வாக்காளர்கள் பட்டியலில்இருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

அரியலூரில் ஆட்சியர் த.ரத்னா வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 2,54,807 ஆண்கள், 2,56,813 பெண்கள், 7 இதரர் என மொத்தம் 5,11,627 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூரில் ஆட்சியர்  வெங்கட பிரியா வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 2,73,468 ஆண்கள், 2,82,829 பெண்கள், 35 இதரர் என மொத்தம் 5,56,332 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூரில் ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,25,560 ஆண்கள், 4,53,454 பெண்கள், 68 இதரர் என மொத்தம் 8,79,082 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 6,48,773 ஆண்கள், 6,61,231 பெண்கள், 64 இதரர் என மொத்தம் 13,10,068 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகையில் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 6,42,617 ஆண்கள், 6,62,089 பெண்கள், 41 இதரர் என மொத்தம் 13,04,747 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூரில் ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து, 5,00,344 ஆண்கள், 5,15,171 பெண்கள், 40 இதரர் என மொத்தம் 10,15,555 வாக்காளர்கள் உள்ளனர்.

தஞ்சாவூரில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 9,80,016 ஆண்கள், 10,26,69 பெண்கள், 130 இதரர் என மொத்தம் 20,06,215 வாக்காளர்கள் உள்ளனர்.

காரைக்காலில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 72,408 ஆண்கள், 84,104 பெண்கள், 17 இதரர் என மொத்தம் 1,56,529 வாக்காளர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்