திருவள்ளூர் மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை விரைந்து முடிக்க சுகாதார துறை செயலர் வலியுறுத்தல்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும்பணி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை, நேற்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 39,500-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 38 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 635-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழக சுகாதார துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.165.63கோடி மதிப்பிலான புதியகட்டிடங்கள் அமைக்கும் பணி, ஆட்சியர் அலுவலகம்அருகே ரூ.220 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி, தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

திருவள்ளூரில் ரூ.385.63கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் யாவும் ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்த ஆய்வுகளின்போது, ஆட்சியர் பொன்னையா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன், குடும்ப நலம் மற்றும் ஊரக நலப் பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி, பொதுப்பணித் துறை (மருத்துவப் பிரிவு) செயற்பொறியாளர் முத்தமிழ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE