சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் உபரிநீர் அடையாற்றில் கலந்து எந்தப் பயனுமின்றி கடலில் கலந்துவிடுகிறது. இதை தவிர்க்க நீர்நிலைகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது.
இவ்வகையில் மழைக் காலங்களில் நிறையும் ஒரத்தூர் ஏரியின் உபரிநீர், ஒரத்தூர் மடுவின் வழியாக அடையாற்றில் கலந்து கடலில் வீணாக கலக்காமல், சேமித்துவைக்க ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஏரிகள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து சுமார் 763 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின்கீழ் ரூ.55.85 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் புதிய நீர்த்தேக்கத்தில் 750 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கலாம். மேலும் இந்நீர்த்தேக்கத்தை அம்மணம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் ஏரிகளுடன் இணைக்கும் திட்டமும் உள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் சென்னை குடிநீருக்காக மணிமங்கலம் ஏரியில் இருந்து தண்ணீர் வழங்க திட்டமிட்டுள்ளோம் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரத்தூர், ஆரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து அம்மணம்பாக்கம் ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வரும் வகையில் 1,100 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரியில் இருந்து படப்பை ஏரிக்கு திறந்தவெளி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் மணிமங்கலம் ஏரிக்கு பாதாள மூடுகால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு, ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்
கொள்ள அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இணைப்புக் கால்வாய்
இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் தே.குஜராஜ் கூறியதாவது: ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏற்கெனவே 3 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏற்கெனவே திறந்தவெளி கால்வாய் மூலம் அம்மணம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து படப்பை ஏரிக்கும், படப்பை ஏரியில் இருந்து மணிமங்கலம் ஏரிக்கும் இணைப்பு வசதி இல்லாததால் 1,350 மீட்டர் தூரம் இணைப்பு கால்வாய் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில் 950 மீட்டர் நீளத்துக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் பாதாள மூடுகால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இந்த பாதாள மூடுகால்வாய் வண்டலூர் ஒரகடம் சாலை வழியாக மணிமங்கலம் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago