மேலூர் பொதுப்பணித் துறை கோட்டத்தில் இருந்து சிவகங்கை கோட்டம் உருவாக்கப்படுமா? பெரியாறு பாசன நீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்

By செய்திப்பிரிவு

பெரியாறு பாசன நீர் திறப்பில் சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், மேலூர் பொதுப்பணித் துறை கோட்டத்தில் இருந்து சிவகங்கையை பிரித்து தனி கோட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசன கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல் மாணிக்கம் கால்வாய், சிங்கம்புணரி கால்வாய், மறவமங்கலம் உள்ளிட்ட விஸ்தரிப்பு மற்றும் நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு பெரியாறு பாசன கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்கு நீர் திறந்துவிடுவதில்லை. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராட்டம் நடத்திய பின்பே சிவகங்கைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன கால்வாய்கள் முழுவதும் பொதுப்பணித் துறை மேலூர் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. போதிய பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாததால் கால்வாயின் பல இடங்கள் சேதமடைந்துள்ளன.

பொதுவாக 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் இருந்தாலே தனி கோட்டம் உருவாக்க முடியும். சிவகங்கை மாவட்ட பெரியாறு கால்வாய்கள் மூலம் 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. எனவே, தனி கோட்டம் அமைப்பதில் சிக்கல் ஏதும் இல்லை என்று சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: தற்போது சிவகங்கை மாவட்ட கால்வாய்கள் அனைத்தும் மதுரை மாவட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை மாவட்ட அமைச்சர்கள், விவசாயிகள் கூறுவதைத்தான் அதிகாரிகள் கேட்கின்றனர்.

மேலூர் பொதுப்பணித் துறை கோட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்தைப் பிரித்து தனி கோட்டம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முறைப்படி பெரியாறு பாசன நீர் கிடைக்கும். கால்வாய்களும் சிறப்பாக பராமரிக்கப்படும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்