நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சேரன்மகாதேவியில் சார் ஆட்சியராக பொறுப்பு வகித்தவர். அத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இனயம் துறைமுகத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலராகவும் பணிபுரிந்தவர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த விஷ்ணு, 2011-2012-ல் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 7-வது இடம் பெற்று தேர்வானவர். திருநெல்வேலி மாவட்டத்தின் 37-வது ஆட்சியராக நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த 24.05.2018 முதல் பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். தேசிய சுகாதார இயக்கக இயக்குநர் கே.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 26-வது ஆட்சியராக நேற்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய ஆட்சியர் செந்தில்ராஜ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். 2012-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவர், வேலூர் மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கினார். பின்னர் திருப்பூர், ஓசூர் ஆகிய இடங்களில் சார் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சுகாதாரத்துறையில் இந்திய மருத்துவ பிரிவு ஆணையர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

விமான நிலையத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவை ஆட்சியர் செந்தில்ராஜ் சந்தித்து வாழ்த்து பெற்றார். எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் உடனிருந்தனர்.

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஓராண்டு முடிவதற்குள் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மீன்வளத்துறை இயக்குநராக இருந்த எஸ்.சமீரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்