வேலூர் மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் காஸ் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகளில் தீ பிடித்து சேதமடைந்தன.
வேலூர் முத்து மண்டபம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ‘பி ’ பிளாக்கில் ஏராளமான வீடுகள் உள்ளன. அங்குள்ள ஒரு வீட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி, பலகாரம் செய்ய காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.
அப்போது, காஸ் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். மேலும், அந்த வீட்டின் பின்பகுதியில் உள்ள குடி யிருப்பு பகுதியில் தீ பிடித்துள்ளது.
உடனே, வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும்,தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 2 வீடுகளில் இருந்த துணிகள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாயின. அதேபோல், சத்துவாச்சாரி அடுத்த மலையடிவாரத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தீபாவளியையொட்டி பலகாரம் செய்தபோது, அங்கும் தீ விபத்து ஏற்பட்டு குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் வேலூர் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர்.வீட்டில் இருந்தவர்கள் எந்தவிதமான காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு மற்றும் சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago