நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாரக் கணக்கில் தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், "திருப்பூர் மாநகருக்கு முதல்வர் வந்ததால், ஓரிரு நாளில் சில சாலைகளை மட்டும் பளிச்சென்று மின்ன வைக்க மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறையால் சாத்தியமாகிறது. ஆனால், லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் வாழும் திருப்பூரில், திரும்பிய பக்கமெல்லாம் குப்பைமேடாக காட்சியளிக்கிறது.
2-வது கரோனா அலை உலகை மிரட்டும் நிலை உள்ளதாலும், மழை காலமாக உள்ள சூழலாலும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் முக்கிய சாலைகள் பழுதடைந்துள்ளன. 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வராத நிலை உள்ளது. ஆனால், மாநகரை சீர்மிகு திருப்பூராக மாற்றுகிறோம் எனக் கூறி, அடிப்படை கட்டமைப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து செயல்படவில்லை. போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago